கடலூர் துறைமுகம் அருகே, மீனவர் வீட்டில் ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை - வாலிபர் கைது
கடலூர் துறைமுகம் அருகே மீனவர் வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகம் அருகே உள்ள தைக்கால் தோணித்துறையை சேர்ந்தவர் முருகன்(வயது 42). மீனவர். இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் சிதம்பரம் அருகே முடசல் ஓடையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டனர். நேற்று காலையில் முருகன் வளர்த்து வரும் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக அவரது நண்பர் பரமானந்தம் வந்தார்.
அப்போது முருகன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக முருகனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ கதவும் திறந்திருந்தது. அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் தங்க நகைகள், ஒரு செல்போன் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுகம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முருகன் தனது வீட்டில் 3 நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களை கட்டிப்போட்டு அவர், குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திதான் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. வீட்டு கதவை உடைத்தபோது நாய்கள் குரைக்கவில்லை. எனவே முருகனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்களில் ஒருவர்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முருகனுடன் வேலை பார்த்து வந்த தைக்கால் தோணித்துறையை சேர்ந்த மகேந்திரன் மகன் மகேஷ்(32) என்பவர்தான் நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்த போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டினார்.
Related Tags :
Next Story