தென்னிலை அருகே கழிவுகளை கொட்டிய லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு போலீசார் விசாரணை
தென்னிலை அருகே கழிவுகளை கொட்டிய லாரி பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க. பரமத்தி,
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கரைமேடு காலனி அருகே நேற்று அதிகாலை ஒரு லாரியில் இருந்து கழிவுகளை கொட்டியுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ன என்று கேட்டுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் தேவரப்பன்பட்டியை சேர்ந்த அழகுமுத்து (வயது 40) அங்கிருந்து லாரியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சத்தம்போட்டு அக்கம், பக்கத்தில் உள்ள ஊர் பொதுமக்களை கூப்பிட்டுள்ளனர். அங்கு வந்த பொதுமக்கள் அந்த லாரியை மடக்கி பிடித்து சிறைப்பிடித்தனர். இதனையடுத்து தென்னிலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
விசாரணையில், இந்த லாரி ஈரோடு மாவட்டம் நசியனூரில் இருந்து வந்தது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்னிலை கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் தென்னிலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொட்டிய கழிவுகளை அதே லாரியில் எடுத்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் கழிவுகளை மாதிரி சோதனை செய்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story