16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்


16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2020 9:50 AM IST (Updated: 1 Nov 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் 16 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் மூலம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில், பொருளாளர் ராமலிங்கம், வட்ட செயலாளர் அப்துல்காதர் முன்னிலையில் கோரிக்கை மனுவினை கலெக்டர் கோவிந்தராவிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு, நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். பணி வரன்முறை செய்யாத 5 ஆயிரம் பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

16 அம்ச கோரிக்கை

நியாயவிலைக்கடைகளில் கட்டுப்பாட்டு பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் இறந்த நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பயோமெட்ரிக் முறையில் நெட்வொர்க் சர்வர் பிரச்சினைகளை களைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கனிவுடன் பரிசீலனை செய்து, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோஷங்கள் எழுப்பினர்

இதில் நிர்வாகிகள் தனவேல், முருகானந்தம், மதி, ராஜேந்திரன், மதியழகன், ரவி, அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களும் எழுப்பினர்.

Next Story