தனியார் பள்ளிக்கூடங்களில் இருந்து 5¼ லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்தனர் அமைச்சர் தகவல்
தனியார் பள்ளிக் கூடங்களில் இருந்து 5¼ லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்து உள்ளனர் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பணி தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து சுமார் 350 பயனாளிகளுக்கு பசுமை வீடு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை, முதியோர் உதவிதொகையை அமைச்சர் வழங்கினார். மேலும் வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
முன்னோடி மாநிலம்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 303 பேர் மருத்துவ படிப்பு படிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை தமிழக கவர்னர் பாராட்டியுள்ளார். நீட் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி பெற இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களிலேயே தற்போது சேர்த்து வருகிறார்கள். இந்த ஆண்டு 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் தனியார் பள்ளிக்கூடங்களில் இருந்து அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர். பள்ளிக்கூடங்களை திறக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. திறந்தவெளியில் உட்கார்ந்து மாணவர்கள் படித்தாலும் வெயில், பனியின் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.
நீட் தேர்வு பயிற்சி
ஆன்லைன் பதிவுகள் முடிவடைந்ததும் 2 அல்லது 3 நாட்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தியாகராஜன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story