துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம், மின்னணு சாதனங்கள், சிகரெட், மதுபாட்டில்கள் பறிமுதல்


துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம், மின்னணு சாதனங்கள், சிகரெட், மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2020 12:22 AM GMT (Updated: 2 Nov 2020 12:22 AM GMT)

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு சாதனங்கள், சிகரெட், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து 11 வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு, 

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்தவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு திரும்பி வந்த நிலையில், அமீரக நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்தியாவில் இருந்தும் பயணிகள் சிறப்பு விமானத்தில் அமீரகத்துக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுலா விசா

மேலும் துபாய் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து பலர் சுற்றுலா விசாவில் சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றுவருகிறார்கள்.

இவ்வாறு சென்று வருபவர்களில் பலர் சமீபகாலமாக தங்கம் கடத்தி வந்தனர். குறிப்பாக துபாயில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் வந்தவர்கள் பலர் தங்கம் கடத்தி வந்ததாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில் சிக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கம் கடத்தல்

இந்தநிலையில் நேற்று காலை 5.40 மணிக்கு துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் குருவிகள் சிலர் தங்கம், மின்னணு சாதனங்களை பயணிகள் போர்வையில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த வியாபாரிகள் சுமார் 15 பேரை மறித்து, அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பறிமுதல்

இதில், 4 பேர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே பொருட்களை எடுத்து வந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மற்ற 11 பேரில் 3 பேர் தங்கள் உடலில் தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்திருந்தனர். மற்ற 8 பேர் சட்டவிரோதமாக ஹெலிகேமரா, செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள், சிகரெட், மதுபாட்டில்கள் போன்றவற்றை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 11 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story