மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கம், அறநெறிகளை கற்றுக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு
மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கம், அறநெறிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வி.ஐ.டி.யில் காணொலி மூலம் நடைபெற்ற அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை உதவித் தொகை வழங்கும் விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ந.கிருபாகரன் பேசினார்.
வேலூர்,
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்காக டாக்டர் கோ.விசுவநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை இயங்கி வருகிறது.
2019-20 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா காணொலி வாயிலாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் 1,135 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ரூ.64 லட்சம் வழங்கப்பட்டது.
2012-ம் ஆண்டு முதல் இது வரை 6 ஆயிரத்து 824 மாணவர்களுக்கு ரூ.7 கோடியே 18 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு நீதிபதி ந.கிருபாகரன் கலந்து கொண்டு பேசுகையில் “மாணவர்கள் படிப்போடு ஒழுக்கம், அறநெறிகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பணிகளை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அடிப்படை கல்வியை மேலும் தரமாக அளிக்கக்கூடிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். தாய்மொழி தமிழோடு உலகமொழி ஆங்கிலத்தையும் சிறந்த முறையில் பயில வேண்டும்.
மேலும் நமக்கு கல்வியை வழங்கிய பெற்றோர்களை கடைசிவரை நம்முடன் வைத்து கவனித்துக்கொள்வது மனிதனுக்கு தலையாய கடமை. மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏற்றவாறு தட்டச்சு, சுருக்கெழுத்து போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
தடுக்கும் சக்தி
நிகழ்ச்சியில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், “உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியுள்ளது. உயர்கல்வி வழங்குவது குழந்தை திருமணங்களை தடுக்கும் ஒரு சக்தி. மத்திய அரசு கல்விக்காக 6 சதவீதத்திற்கும் மேல் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை போன்று மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள், உயர்கல்விக்கு உதவி செய்ய தொடங்கி விட்டால் இந்தியா உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் செயலாளர் லட்சுமணன், நிதிக்குழு தலைவர் வெங்கடசுப்பு, அறங்காவலர்கள் மயிலாம்பிகை குமரகுரு, வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அறக்கட்டளையின் பொருளாளர் ஜவரிலால் ஜெயின் வரவேற்றார். கைசர் அஹமது நன்றி கூறினார். நிகழ்ச்சியை அறங்காவலர் புலவர் வே.பதுமனார் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தர்ராஜ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story