ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2020 9:52 AM IST (Updated: 2 Nov 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டி வட்டத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி செயலாளர் பிரபாகரன் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திருப்பத்தூர் புதுப்பேட்டை செல்லும் அச்சமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பழுது அடைந்துள்ளது. சீர்செய்யும் வரை வரை ஊராட்சி சார்பாக அப்பகுதி பொதுமக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story