மதுரை மண்டலத்தில் இந்த ஆண்டு ரூ.180 கோடி விற்பனை இலக்கு சர்வோதயா சங்க மண்டல இயக்குனர் தகவல்
மதுரை மண்டலத்தில் இந்த ஆண்டு ரூ.180 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சர்வோதயா சங்க மதுரை மண்டல இயக்குனர் அசோகன் தெரிவித்தார்.
சிவகாசி,
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சர்வோதயா சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கதர் கிராம கைத்தொழில் ஆணையத்தின் மதுரை மண்டல இயக்குனர் அசோகன் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் ஈஞ்சார் விலக்கில் உள்ள சர்வோதயா விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சர்வோதயா சங்கம் சார்பில் மதுரை மண்டத்தில் பல்வேறு இடங்களில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மத்தியஅரசின் உத்தரவுப்படி இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 2020-2021-ம் நிதி ஆண்டில் மதுரை மண்டலத்தில் மட்டும் சர்வோதயா சங்கம் சார்பில் ரூ.180 கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். கொரோனா காலக்கட்டத்தில் 30 சதவீத விற்பனை பாதித்துள்ளது.
விற்பனை உயர்வு
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் விற்பனை அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் சர்வோதயா பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விற்பனையும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கதர் கிராம கைத்தொழில் ஆணையத்தின் மதுரை மண்டல வளர்ச்சி பிரிவு அதிகாரி சதிஷ்குமார், ராமநாதபுரம் மத்திய சர்வோதயா சங்கத்தின் சிவகாசி சங்க செயலாளர் காளியப்பன், தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீபாவளியையொட்டி சிறப்பு சலுகையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சர்வோதயா அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story