தமிழன்னை சிலை அருகே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேர் கைது
தமிழன்னை சிலை அருகே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
தமிழகத்தில் நேற்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆதித்தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் கொடியுடன் மதுரை தமுக்கம் மைதானம் முன்பு உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்தனர்.
பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன்னை சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அரசு வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
71 பேர் கைது
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் போராட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை, தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்து விடுவோம் என எச்சரித்தனர்.
அதன்பின்னரும் போராட்டம் நீடித்ததால், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 71 பேரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் அழைத்து சென்றனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.
Related Tags :
Next Story