பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம்- ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை ரூ.40 ஆயிரம் பறிமுதல்
பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் நேற்று இரவு திடீர் சோதனைநடத்தினர். அப்போது, ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் சமீபகாலமாக கூட்டுபட்டாவை தனி பட்டாவாக மாற்றுதல், இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினற்கான சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் அதிக அளவில் பணம் புழங்குவதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.
அதன்பேரிலும், அதிக அளவில் பண புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று பெரம்பலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.
ரூ.40 ஆயிரம் பறிமுதல்
பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தின் பிரதான இரும்பு கேட்டுகளை பூட்டினர். அதன் உட்புறம் உள்ள நிலை கதவுகளும் மூடப்பட்டு, பரிசோதனை நடந்தது. அப்போது பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த தாசில்தார் அருளானந்தம், தலைமையிடத்து துணை தாசில்தார் புகழேந்தி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களிடமும், தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமும், அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. அப்போது சுமார் ரூ.40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தாசில்தாரின் ஜீப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் இரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story