வேளாண் சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி


வேளாண் சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி
x
தினத்தந்தி 3 Nov 2020 6:01 AM IST (Updated: 3 Nov 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.

மலைக்கோட்டை, 

தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகமான அருணாசல மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் சுப.சோமு, மாநில பொதுக் குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம், அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கூறியதாவது;-

வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும்

மத்திய அரசு விவசாயிகளை பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். விவசாயிகளின் நலனுக்காக விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது உடனடியாக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவோம்.

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கிறது. இதனை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 இடங்களையும் வெல்லும். கல்வி, இட ஒதுக்கீடு என எல்லாவிதத்திலும் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படும் அரசாக உள்ளது. மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் கண்மூடித்தனமாக அதை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது.

கூட்டணி தொடருமா?

தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. கூட்டணி தொடருமா? என்ற வதந்திகளை நான் கண்டுகொள்வதில்லை. திருச்சி மக்கள் திருநாவுக்கரசரை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்திருந்தனர். தொடர்ந்து மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தினை சஞ்சய் தத் தொடங்கி வைத்தார்.

இதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலை தலைமை தாங்கினார். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் இளையராஜா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் முன்னதாக லால்குடி வட்டார தலைவர் சுகுமார் வரவேற்று பேசினார். முடிவில் மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனபாலன் நன்றி தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததை தொடர்ந்து அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் ஏறி அமர்ந்து, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசையும், அதற்கு துணைபோவதாக மாநில அரசையும் கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story