ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி; புதிதாக 91 பேருக்கு பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி; புதிதாக 91 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2020 7:36 AM IST (Updated: 3 Nov 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலியானார். புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தினமும் 80 முதல் 140 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 91 பேர் இடம் பெற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்து 478 ஆக உயர்ந்தது.

பெண் பலி

இதற்கிடையில் ஈரோடு பகுதியை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை காரணமாக கடந்த மாதம் 27-ந்தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த பெண் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 100 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story