அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் ஊராட்சி செயலாளரை மாற்றியதற்கு எதிர்ப்பு
பொம்மிகுப்பம் ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் பிரகாசம். இவரை தாதனவலசை ஊராட்சிக்கும், அங்கு பணிபுரிந்த முத்துக்குமார் பொம்மிகுப்பம் ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பொம்மிகுப்பம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், திட்ட இயக்குனர் உள்ளிட்ட பலருக்கு மனு அளித்திருந்தனர்.
அதில் பொம்மிகுப்பத்தில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூறியிருந்தனர். இந்த நிலையில் முத்துக்குமார் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பணிக்கு வந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்தனர்.
மாற்றக்கூடாது
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து 2 பேரையும் தவிர்த்து புதிய ஊராட்சி செயலாளரை நியமனம் செய்ய வலியுறுத்துகிறோம் என கூறி சமாதானம் செய்தனர்.
அதற்கு கிராம மக்கள் ஊராட்சி செயலாளர் பிரகாசம் எங்கள் கிராமத்தில் நல்ல முறையில் பணி செய்து வருகிறார். அவரை மாற்றக்கூடாது. தாதனவலசை ஊராட்சி செயலாளரை புகாரின்பேரில் மாற்றுகிறார்கள். அவரை எங்கள் ஊராட்சிக்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தினர். பின்னர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story