படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு; 7 பேர் கைது


படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2020 3:30 AM IST (Updated: 4 Nov 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே வாலிபரை வெட்டியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). இவருடைய சகோதரியின் திருமணம் கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொண்ட கரசங்கால் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம், ( 20), பிரதாப் மற்றும் அசோக்குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருமணம் முடிந்து அசோக்குமார் தனது சகோதரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கரசங்கால் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார்.

விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரியாணி எடுத்து கொண்டு அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள நண்பர்களுக்கு கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கரசங்கால் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் நித்தியானந்தம் (20), புருஷோத்தமன் (20), படப்பை தமிழ்ச்செல்வன் (20), குழங்கலச்சேரி ஜெயசூர்யா (21) கரசங்கால் கார்த்திக் (30) ஆகியோர் அசோக்குமாரை வழிமறித்து ஏற்கனவே திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற கைகலப்பு சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அசோக்குமாரை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து அனைவரும் தப்பிச்சென்று விட்டனர்.

வெட்டுபட்ட நிலையில் கிடந்த அசோக்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, சிறுவர்கள் இருவரை சீர்திருத்த பள்ளிக்கும் 5 பேரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரதாப்பை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story