ஜெயங்கொண்டத்தில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ஜெயங்கொண்டத்தில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 4 Nov 2020 5:19 AM IST (Updated: 4 Nov 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில், விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், கோர்ட்டு உத்தரவின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மகன் பாரதிராஜா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து தனது மகன் இறந்ததால், அரசு போக்குவரத்து கழகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்து 722 தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

இதையடுத்து கோர்ட்டு உத்தரவினை நிறைவேற்றக்கோரி, மீண்டும் கோர்ட்டில் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து, விபத்தில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், கடந்த மாதம் 16-ந் தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதன்பின்னரும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிமன்ற அமீனா மகாராஜன், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில், கும்பகோணத்தில் இருந்து சென்னையை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி ஜப்தி செய்து, அரியலூர் நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றார். இதற் கிடையே அந்த பஸ்சில் பயணம் செய்த 15 பயணி களும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story