ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி புதிதாக 88 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 88 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு,
உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய கொரோனா தொற்று ஈரோடு மாவட்ட மக்களையும் பெரும் அச்சமடைய செய்துள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 190-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் மொத்த பாதிப்பும் வேகமாக உயர்ந்தது. எனவே மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500-ஐ தாண்டியது.
இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறை பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 561 ஆக உயர்ந்தது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 98 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 666 பேர் கொரோனாவில் இருந்து பூரணமாக மீண்டு உள்ளார்கள். 768 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பலி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 125 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பெண்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த 42 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பவானியை சேர்ந்த 60 வயது பெண்ணும் நேற்று முன்தினம் பலியானார்.
இந்த 2 பெண்கள் இறந்ததால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 127 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story