திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் கண்மாய் கரை அரிப்பால் சகதியாக மாறிய சாலை; வாகன ஓட்டிகள் அவதி


திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் கண்மாய் கரை அரிப்பால் சகதியாக மாறிய சாலை; வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 4 Nov 2020 8:17 PM IST (Updated: 4 Nov 2020 8:17 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சியில் குடிமராமத்து பணியால் உயர்த்தப்பட்ட கண்மாய் கரையானது சாதாரண மழைக்கே தாங்காமல் அரிப்பு ஏற்பட்டு அதன் சகதி மண் ரோட்டில் திட்டு, திட்டாக குவிந்தது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் கரை உயர்த்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பணி முடிந்தது. கண்மாய் உள்வாயிலில் முறையாக ஆழப்படுத்த படவில்லை. மடையில் தண்ணீருக்கே வசதியை ஏற்படுத்தப்படவில்லை. கரையையும் சீராக உயர்த்தவில்லை என்று அப்பகுதி மக்களும் விவசாயிகளும் புகார் தெரிவித்தனர். ஆனாலும் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலைகள் அவசர கதியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிமராமத்து பணியை முடித்தனர்.

இந்தநிலையில் அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. அதில் கண்மாய் கரை அரிக்கப்பட்டு அதன் மண்ணானது மழை நீரோடு கரைந்து, கண்மாயின் கீழ்ப்பகுதியில் உள்ள ரோட்டில் திட்டுத்திட்டாக குவிந்து கிடக்கிறது. அதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் அல்லாது பாதசாரிகள் கூட கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, குடிமராமத்து பணியின்போது கரையை உயர்த்துவதால் பயனில்லை. மடையில் தண்ணீர் ஏறி நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம் அதை கண்டு கொள்ளவில்லை.

மழை பெய்தால் கண்மாய் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கக்கூடும். ஆகவே கண்மாய்க்கரை முழுவதுமாக கற்கள் பதிக்கப்பட்டு கரையை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதையும் அதிகாரிகள் காது கொடுத்து கேட்கவில்லை. குடிமராமத்து பணி முடிந்து ஒரு சில வாரங்களாக ஆகிறது. அதற்குள் சாதாரண மழைக்கு கூட கண்மாய் கரை அரிக்கப்பட்டு அதன் மண் ரோட்டிற்கு வந்துள்ளது. பெரிய மழை பெய்தால் கரை முழுவதும் அரிப்பு ஏற்பட்டு விடும். ஆகவே கண்மாய் கரையை பலப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நேரடியாக பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story