கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் நடவடிக்கை


கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2020 7:55 AM IST (Updated: 5 Nov 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.

கும்பகோணம், 

கும்பகோணம் நகரம் ஆன்மிக சுற்றுலா தலமாகவும், மிகப்பெரிய வர்த்தக நகரமாகவும் திகழ்கிறது. இங்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. கும்பகோணம்- தஞ்சை சாலை உச்சி பிள்ளையார் கோவில் பகுதி, நாகேஸ்வரன் வடக்கு வீதி, கும்பகோணம் பெரிய தெரு, மடத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

வர்த்தக நிறுவனங்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கும்பகோணம் கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று போக்குவரத்து போலீசார் கும்பகோணம் செல்வம் தியேட்டர் முதல் உச்சி பிள்ளையார் கோவில் வரை உள்ள பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள், தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், சாலையை மறித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வியாபார நிறுவனங்கள் விளம்பர தட்டிகளை சாலையில் வைக்கக்கூடாது என்றும், வாகன ஓட்டிகள் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்லக்கூடாது என்றும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story