கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை: கொள்ளையர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது
நாகர்கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.
நாகர்கோவில்,
அகஸ்தீஸ்வரம் புவியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஓட்டல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் வந்தார். ஓட்டலின் முன்பு காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
இதைத் தொடர்ந்து காரில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச் சென்று காரில் வைத்திருந்த பணத்தை தேடினார். ஆனால் பணம் இல்லை. கார்த்திக் பணம் கொண்டு வந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் சிலர், கார் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் உருவமும், அவர்கள் கொள்ளையடித்த காட்சிகளும் கண்காணிப்பு கேரமாவில் பதிவாகி இருந்தன.
அதாவது கண்காணிப்பு கேமராவில் 4 பேரின் உருவம் தெரிகிறது. முதலில் 2 பேர் காரின் அருகே அங்குமிங்குமாக சுற்றி வருகிறார்கள். பின்னர் அங்கு இருந்த காவலாளியை 2 பேர் நைசாக பேசி மறைவான இடத்துக்கு அழைத்து செல்கிறார்கள். அதன்பிறகு ஒருவர் கார் கண்ணாடியில் ஸ்பிரே போன்று எதையோ அடிக்கிறார். இதைத் தொடர்ந்து கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்கிறார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. ஆனால் இரவு நேரம் என்பதால் கொள்ளையர்களின் முகம் தெளிவாக தெரியவில்லை.
தனிப்படை
எனினும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் எனில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் காரில் வந்து செல்வார்கள்.
இந்த சமயத்தில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story