புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலி புதிதாக 24 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று மட்டும் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 713 பேருக்கு தோற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 213 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 43 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், 70 வயது முதியவர், லேணா விளக்கு பகுதியை சேர்ந்த 38 வயது பெண், 14 வயது சிறுவன் ஆகிய 5 பேருக்கு நேற்று கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கீழாநிலைக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 15 பேருக்கும், கடியாபட்டி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 23 பேருக்கும், அரிமளம் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 37 பேருக்கும், ராயவரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 30 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட அடப்பகாரன் சத்திரத்தில் 50 வயது ஆண் மற்றும் 18 வயது ஆண், முள்ளூர் கிராமத்தில் 38 வயது ஆண் மற்றும் 18 வயது பெண்ணுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 10 பேர் இறந்துள்ள நிலையில், 7 பேர் சிகிச்சையில் உள்ளனர். 447 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story