குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மழை காரணமாக புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின


குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மழை காரணமாக புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின
x
தினத்தந்தி 6 Nov 2020 7:04 PM IST (Updated: 6 Nov 2020 7:04 PM IST)
t-max-icont-min-icon

மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஊட்டி,

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில், பார்த்து மகிழ பல இடங்கள் உண்டு. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா பரவலை தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. மழை பெய்யும்போது இங்குள்ள மலையில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதை பார்க்கவே அழகாக இருக்கும். மழை இல்லாததால் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்படும் இடங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பருவமழை தொடங்கி பெய்து வருவதால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தொடங்கி, ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அவற்றை பார்க்க வெள்ளியை உருக்கியதுபோல் இருப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் தங்களின் செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து செல்கிறார்கள்.

குறிப்பாக மரப்பாலம் உள்பட பல இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகளும் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த மழை காரணமாக குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Next Story