ஓசூர் - பெங்களூரு இடையே விரைவில் மின்சார ரெயில் இயக்கப்படும் - தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தகவல்


ஓசூர் - பெங்களூரு இடையே விரைவில் மின்சார ரெயில் இயக்கப்படும் - தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 6 Nov 2020 9:36 PM IST (Updated: 6 Nov 2020 9:36 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் - பெங்களூரு இடையே விரைவில் மின்சார ரெயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் பெங்களூரு வரையும், ஓசூர் - தர்மபுரி இடையே மின்சார ரெயில் இயக்குவதற்கு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் 2017-18-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த மின்மயமாக்க பணிகள் தற்போது ஓசூர் வரை நிறைவு பெற்றுள்ளது.

இதில் ஓசூர் - பெங்களூரு மெஜஸ்டிக் இடையே 55 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையும் மற்றும் ஓசூர் - யஸ்வந்த்பூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையும் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தர்மபுரி வழித்தடத்தில் ஓசூர் ரெயில் நிலையம் முதல் பெரியநாக துணை ரெயில் நிலையம் வரையும் ரெயில் பாதை மின்மயமாக்கப்படும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு - ஓசூர் இடையே மின்மயமாக் கப்பட்ட ரெயில் பாதையை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் வரை ரெயில் இயக்கப்பட்டது. ஓசூர் ரெயில் நிலையம் வந்த இந்த ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மற்றும் குழுவினர் வருகை தந்து ஓசூர் ரெயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அதிகாரி ஏ.கே.ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு - ஓசூர் இடையே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். இந்த ஆய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்குவதற்கு தேவையான அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ரெயில்வே மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விரைவில் ஓசூர்-பெங்களூரு இடையே மின்சார ரெயில் இயக்கப்படும். தற்போது கொரோனா பிரச்சினையை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மின்சார ரெயில் இயக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story