அலங்காநல்லூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
அலங்காநல்லூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டியில் உள்ள ஊராட்சியின் எல்லைப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சுய உதவிக்குழு பெண்கள் கூட்டமைப்பு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்களது கிராமத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு ஏழை நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடை அமைந்தால் வாழ்வாதாரம் பாதிப்பதோடு மாணவர்கள், இளைஞர்கள் விவசாயிகள் என்று அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என மனு கொடுத்து இருந்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கென்னடி கண்ணன் தலைமையில் சாலை மறியல் செய்தனர்.
அலங்காநல்லூர்-ஊமச்சிகுளம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பாக சாலையில் அமர்ந்து டாஸ்மாக் கடை வேண்டாம் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதைதொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி தாசில்தார் பழனிக்குமார், அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த இடத்தில் டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அமைக்கப்படாது எனவும், இதுகுறித்து கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நிரந்தரமாக அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்திருந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீரென நடைபெற்ற இந்த சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story