மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 9-ந் தேதி தொடக்கம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 9-ந் தேதி தொடக்கம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2020 2:34 PM IST (Updated: 8 Nov 2020 2:34 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 9-ந் தேதி முதல் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மதுரை, 

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 450 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 450 தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார்கள். பின்னர் விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் “இந்தியா முழுவதும் 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட சூழலில் ஜெயலலிதா போராடி தமிழகத்திற்கு 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார். தனியார் பள்ளிகளும் கல்வி சேவையாற்ற வேண்டும் என அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா தொற்றில் மக்களை காப்பாற்றி வருகிறது“ என்றார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் “நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக அவசியம் என கூறியவர் அப்துல்கலாம். எனவே தான் அரசு அந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் உலகமே விழி பிதுங்கி நிற்கும் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்“ என்றார்.

9-ந் தேதி நீட் பயிற்சி வகுப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வருவது குறித்து பேசும்போது அதற்கான நிதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே துண்டு ஏந்தியாவது சத்துணவு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அவரது வழியில் ஜெயலலிதாவால் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி பயில இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது, இவ்வாறு தமிழகத்தில் இலவசமாக 58 லட்சத்து 48 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகிகள் முன் வந்தால் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தங்கு தடையில்லாமல் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக 303 அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறந்த பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. அடுத்து நடைபெற உள்ள நீட் பயிற்சிக்கு 15,492 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற 9-ம் தேதி முதல் ஆன்லைன் வழியே நீட் தேர்வு பயிற்சி வகுப்பு அளிக்கப்படும்” என்றார்.

பள்ளி திறப்பு

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்து விட்டார். உள் இடஒதுக்கீடு வழங்குவதில் சட்டத்தின்படியே நடக்க முடியும். பள்ளிகள் திறப்பதில் முதல்-அமைச்சர் உரிய முடிவு எடுப்பார். பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்தை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தான் முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்ட சீரமைப்பு குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய அளவில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் ரொக்க பரிசை அமைச்சர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன், மெட்ரிக் பள்ளி இணை இயக்குனர் கோபிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், நீதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story