ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை: ஜன்னல் திரைச்சீலையை மாற்ற சென்ற போது - கைவரிசை காட்டிய வாலிபர் கைது


ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை: ஜன்னல் திரைச்சீலையை மாற்ற சென்ற போது - கைவரிசை காட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2020 8:58 AM IST (Updated: 9 Nov 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னல் திரைச்சீலையை மாற்ற சென்றபோது கைவரிசை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

கோவை,

கோவையில் பீளமேடு அருகே லட்சுமிகார்டன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 75). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய வீட்டு ஜன்னல் திரைச்சீலைகள் கிழிந்து விட்டன. அதை மாற்றி விட்டு புதிய திரைச்சீலைகளை பொருத்த அவர் முடிவு செய்தார். இதற்கு பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்த வீட்டு உள்அலங்கார வடிவமைப்பாளர் முகமது நிஜாஸ் (26) என்பவரை அணுகினார்.

இதையடுத்து கடந்த 6-ந் தேதி வேலுவின் வீட்டில் உள்ள ஜன்னல்களில் புதிய திரைச்சீலைகளை பொருத்தும் வேலையில் முகமது நிஜாஸ் ஈடுபட்டார். அப்போது அவர், வீட்டின் ஜன்னலுக்கு அருகில் ஒரு பெட்டியில் 41 பவுன் நகைகள் இருப்பதை கண்டார். அதை பார்த்ததும் அந்த நகைகளை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

அதன்படி பெட்டியில் இருந்த நகைகளை மட்டும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வேறு இடத்தில் மறைத்து வைத்தார். பின்னர் திரைச்சீலைகள் பொருத்தும் பணியை முழுமையாக முடித்தார். அதன்பிறகு வேலுவிடம் திரைச்சீலைகளை மாற்றியதற்கு உரிய கூலியை வாங்கினார். பின்னர் அந்த வீட்டில் தான் மறைத்து வைத்த நகைகளை எடுத்துக்கொண்டு முகமது நிஜாஸ் திரும்பி சென்று விட்டார்.

இதையடுத்து வேலு தனது வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்தார். அப்போது ஜன்னல் அருகில் உள்ள பெட்டியில் இருந்த நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷோபனா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார்.

இதில், வேலுவின் வீட்டில் திரைச்சீலை அமைக்க வந்த முகமது நிஜாஸ், நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் ஜோதிபுரத்தில் பதுங்கி இருந்த முகமது நிஜாசை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story