வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 3 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் கொள்ளை-மர்மநபர்கள் துணிகரம்


வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 3 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் கொள்ளை-மர்மநபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 9 Nov 2020 9:17 AM IST (Updated: 9 Nov 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 3 கிலோ தங்கம், 10 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் வள்ளலார் 15-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 63), இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மகன் மதுரையில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்திரன் மற்றும் குடும்பத்தினர் மாலை நேரத்தில் தேவாலயத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அறை முழுவதும் ஆங்காங்கே துணிமணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சந்திரன், அவரின் குடும்பத்தினர் மற்றும் அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள், வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகை மாதிரிகளை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “சந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நடமாட்டத்தை மர்மநபர்கள் கடந்த சில நாட்களாக நன்கு நோட்டமிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன், குடும்பத்தினருடன் தேவாலயம் செல்வார் என்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் நேற்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story