மும்பையில் நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் சோதனை விசாரணைக்கு ஆஜராக சம்மன்
இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.
மும்பை,
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து இந்தி திரையுலகம் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியது. இந்த விவகாரம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்(என்.சி.பி.) விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் ஏற்கனவே சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்டோரை கைது செய்தனர். நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் உள்ளார்.
இதேபோல போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக முன்னணி நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
தயாரிப்பாளர் மனைவி கைது
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலினர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, எம்.டி., சரஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மும்பை ஜூகுவில் உள்ள பிரபல இந்தி பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யதை அதிரடியாக கைது செய்தனர்.
நடிகர் வீட்டில் சோதனை
இந்தநிலையில் நேற்று அவர்கள் மும்பை பாந்திராவில் உள்ள பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் (வயது47) வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சில எலெக்ட்ரானிக் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நடிகரின் டிரைவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் நாளை (புதன்கிழமை) போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு சம்மன் கொடுத்தனர்.
இதற்கிடையே நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலா ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், நடிகரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story