பறிமுதல் செய்த வாகனங்களை திருடிய போக்குவரத்துத் துறை ஊழியர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருடியதாக போக்குவரத்துத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் உரிய அனுமதியின்றி வாடகைக்கு விடப்பட்ட 2 சக்கர வாகனங்களை போக்குவரத்துத் துறையினர் கடந்த 2019-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் போக்குவரத்துத்துறை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 9 வாகனங்கள் திருடு போய் விட்டதால், அதை கண்டு பிடித்து தருமாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் 2 வாகனங்களை போக்குவரத்து துறையில் பணிபுரியும் பல்நோக்கு ஊழியரான வீரப்பன் (வயது 54) என்பவர் மீட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கிடுக்குப்பிடி விசாரணை
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்களுக்கு பல்நோக்கு ஊழியரான வீரப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாகன திருட்டு சம்பவத்தில் ஊழியரான வீரப்பனே சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பணம் வசூல்
அதாவது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் சாவியுடன் இணைக்கப் பட்டிருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு பேசி போக்குவரத்துத் துறை வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதை தன்னிடம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய வாகன உரிமையாளர்களிடம் ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை வசூலித்துள்ளார். அதன்பின் வாகனங்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வீரப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story