தாம்பரத்தில் வீட்டு மாடியில் தண்ணீர் தொட்டியில் பிணம் கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை


தாம்பரத்தில் வீட்டு மாடியில் தண்ணீர் தொட்டியில் பிணம் கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Nov 2020 3:25 AM IST (Updated: 11 Nov 2020 3:25 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

தாம்பரம், 

தாம்பரம் சானடோரியம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 56). திருமணம் ஆகாதவர். இதுவரை வேலை கிடைக்காத நிலையில், வயதான பெற்றோரை கவனித்து வந்தார். அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை, வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய சம்பத்குமார், மோட்டார் சுவிட்ச் போட்டுவிட்டு மாடி வீட்டுக்கு சென்றார். அதன்பின், நீண்ட நேரம் ஆகியும், அவர் வீட்டிற்குள் வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தண்ணீர் தொட்டியில் பிணம்

இந்நிலையில், நேற்று மதியம், வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், சம்பத்குமார், மாடியில் இறங்கி வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்த குடும்பத்தினர் முழுவதும் தேடி விட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை பார்த்தனர்.

அப்போது, சம்பத்குமார், தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார், உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தண்ணீரில் மூழ்கடித்து யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story