தமிழகத்தில் புதிதாக 2,146 பேருக்கு கொரோனா பாதிப்பு 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்


தமிழகத்தில் புதிதாக 2,146 பேருக்கு கொரோனா பாதிப்பு 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்
x
தினத்தந்தி 11 Nov 2020 3:30 AM IST (Updated: 11 Nov 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 146 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று புதிதாக 71 ஆயிரத்து 511 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,335 ஆண்கள், 811 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 487 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 577 பேரும், கோவையில் 196 பேரும், திருவள்ளூரில் 107 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 5 பேரும், ராமநாதபுரத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 314 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 51 ஆயிரத்து 808 ஆண்களும், 2 லட்சத்து 96 ஆயிரத்து 384 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 519 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 93 ஆயிரத்து 759 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

25 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனையில் 9 பேரும் என 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 8 பேரும், திருவண்ணாமலையில் 3 பேரும், தஞ்சாவூர், திருப்பூரில் தலா இருவரும், திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், காஞ்சீபுரம், கடலூர், கோவை, செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 14 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 387 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2 ஆயிரத்து 237 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 237 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 591 பேரும், கோவையில் 186 பேரும், திருப்பூரில் 150 பேரும் அடங்குவர். இதுவரையில் 7 லட்சத்து 18 ஆயிரத்து 129 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 18 ஆயிரத்து 709 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story