மதுரவாயல்-துறைமுகம் மேம்பால திட்டம் கிடப்பில் உள்ளதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மதுரவாயல்-துறைமுகம் மேம்பால திட்டம் கிடப்பில் உள்ளதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2020 3:34 AM IST (Updated: 11 Nov 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல்-துறைமுகம் மேம்பால திட்டப்பணி கிடப்பில் உள்ளதை கண்டித்து சென்னையில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும், மேம்பால பணிகளை உடனடியாக முடிக்கக்கோரியும் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரவாயல் மின்சார வாரிய அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

ஆர்ப்பாட்டத்தின்போது மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

சென்னையில் மதுரவாயல்-துறைமுகம் இடையேயான மேம்பால திட்டப்பணி என்பது தி.மு.க.வின் கனவு திட்டமாகும். கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரவாயல்-துறைமுக மேம்பால திட்டத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. ரூ.500 கோடியில் ஏற்படுத்தப்பட்ட தூண்களும், கட்டுமான கம்பிகளும் மழை, வெயிலில் சிக்கி உறுதித்தன்மையை இழந்துள்ளது. இந்த திட்டம் முடிவடைந்திருந்தால் இந்தியாவின் மிக நீண்ட மேம்பாலத்தை கட்டிய பெருமை கருணாநிதிக்கு கிடைத்திருக்கும். ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்தை முழுமையடைய செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.

15 நிமிடங்களில் சென்றுவிடலாம்

மதுரவாயலில் இருந்து துறைமுகத்துக்கு செல்ல 2 மணி நேரம் ஆகும். இந்த மேம்பாலம் சாத்தியமானால் இனி 15 நிமிடத்திலேயே மதுரவாயலில் இருந்து துறைமுகத்துக்கு சென்றுவிடலாம். எனவே நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் மேம்பால திட்டத்தை விரைவில் முடித்து, அப்பாலத்தை மக்கள் பணிக்கு திறந்து வைக்கவேண்டும். இல்லையெனில் இந்த பாலத்தை விரைவில் வர இருக்கும் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் திறப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கைது

இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 1,160 பேர் மீது மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story