7 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
7 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்கள்.
வண்டலூர்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது. அதேவேளையில் பறவைகள்-விலங்குகளுக்கு உணவளித்தல், பூங்கா வளாகம் சீரமைப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பூங்கா ஊழியர்கள் முககவசம் மற்றும் கையுறை அணிந்து பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில் சில தளர்வுகளுடன் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பூங்காவில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. பூங்கா வளாகத்தில் சேதமடைந்த உபகரணங்கள் சீரமைக்கப்பட்டன.
இன்று திறப்பு
வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். அதனால், நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. இன்று (புதன்கிழமை) அரசு அறிவித்தபடி, வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படுகிறது.
சுமார் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுவதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட இருக்கிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-
பாதுகாப்பு நடவடிக்கைகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் கைகளில் சானிடைசர் தெளிக்க 3 இடங்களில் தானியங்கி சானிடைசர் எந்திரங்கள் வைக்கப்படுகின்றன. மேலும் ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே பொதுமக்கள் பூங்கா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்புபோல பறவைகள் மற்றும் விலங்குகளை பார்வையாளர்கள் பார்க்கமுடியாது. வலை போடப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் தொலைவிலேயே சமூக இடைவெளி கடைபிடித்து இனி பறவைகள்-விலங்குகளை பார்த்து ரசிக்க முடியும். மீன்கள், பட்டாம்பூச்சிகள், பாம்புகள் காண தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வாகனங்கள் வரும் வழித்தடத்தில் கிருமிநாசினி தெளிக்க புது நடவடிக்கை கையாளப்பட உள்ளது. இதற்காக தனி இடத்தில் நீர் நிரப்பி அதில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சோடியம் ஹைப்போ குளோரைடு கலக்கப்பட்டு இருக்கிறது. இந்த நீரை கடந்த பின்னரே வாகனங்கள் பூங்கா வளாகத்தில் நுழைய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நுழைவு கட்டணம் உயர்வு
கொரோனா காரணமாக சுமார் 7 மாதங்கள் பூங்கா மூடப்பட்டிருந்ததால் வருவாய் மீட்பு நடவடிக்கையாக பூங்கா கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.75-ல் இருந்த பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.90 ஆகவும், சிறுவர்களுக்கு (5 முதல் 12 வயதுக்குள்) ரூ.35 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஹேண்டி கேமரா, வீடியோ கேமரா, பூங்கா சுற்று வாகனம், சிங்கம், மான்கள் உலாவிடம் செல்லும் வாகன கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்ட காரணத்தால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தாய்ப்பால் ஊட்டும் அறை ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story