கந்தசஷ்டி விழாவை பாரம்பரியப்படி நடத்தக்கோரி திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் போராட்டம்; 235 பேர் கைது


கந்தசஷ்டி விழாவை பாரம்பரியப்படி நடத்தக்கோரி திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் போராட்டம்; 235 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2020 5:42 AM IST (Updated: 11 Nov 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டி விழாவை பாரம்பரியப்படி நடத்தக்கோரி திருச்செந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 235 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை பாரம்பரியப்படி நடத்த வேண்டும். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்த வேண்டும். சிறு, குறு வியாபாரிகள் தடையின்றி வியாபாரம் செய்ய வழி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு பா.ஜனதா சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் போலீசார் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். ஆனால் திருச்செந்தூர் டி.பி.ரோட்டில் காஞ்சி மடம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என பா.ஜனதாவினர் அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மறியல்-கைது

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்காக பா.ஜனதாவினர் வினர் மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையிலான போலீசார் தாலுகா அலுவலகம் ரோட்டில் மறித்தனர். ஊர்வலத்தில் வந்த நூற்றுக்ணக்கான பா.ஜனதாவினர் கோஷமிட்டபடி அங்கேயே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து பா.ஜனதாவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 124 பெண்கள் உள்பட 235 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில், பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட பொது செயலாளர் பிரபு, பொது செயலாளர் செல்வராஜ், இளைஞரணி துணை தலைவர் அய்யப்பன், மகளிரணி பொது செயலாளர் சரஸ்வரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், ஞானசேகரன், கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story