கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி வேல் யாத்திரை: பா.ஜனதா மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்பட 3,106 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி வேல் யாத்திரை, பொதுக்கூட்டம் நடத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்பட 3,106 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
பா.ஜனதா கட்சி சார்பில் வேல் யாத்திரை நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு வேலை ஆயுதம் என்று கூறுகிறது. என் உயிரே போனாலும் வேலை என்னுடன் வைத்துக் கொள்வேன். முருக பெருமானையும், நமது பழக்க வழக்கத்தையும் சிலர் அவமானப்படுத்துகிறார்கள். இதை பா.ஜனதா தட்டி கேட்கும். தமிழ்நாட்டில் பா.ஜனதா சாதாரணமாக வளரவில்லை. பல்வேறு தடைகளை தாண்டி, ஆடிட்டர் ரமேஷ், சுரேஷ், சசிக்குமார் போன்றவர்களின் தியாகத்தால் வளர்ந்துள்ளது. எந்த தடையையும் கண்டு பா.ஜனதா அஞ்ச போவதில்லை.
இந்த யாத்திரைக்கு எத்தனை தடைகள் வந்தாலும் டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூர் முருகனிடம் வேலை சமர்ப்பிப்பேன். அதுவரை ஓய மாட்டேன். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து வந்தவர்கள் நாங்கள். பீனிக்ஸ் பறவையாக திருச்செந்தூர் செல்வோம். அங்கு கூடுவோம். இந்துக்களையும், தமிழ் பெண்களையும், கந்த சஷ்டி கவசத்தையும் இகழ்ந்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம். ஓசூரில் வருகிற மே மாதம் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக பதவியில் இருப்பார்.
கூட்டத்தில், மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கு எதிராக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 21 நாட்கள் யாத்திரை நடைபெறுகிறது. இன்னும் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நாங்கள் சந்திப்போம். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம். கிருஷ்ணகிரி மாவட்டம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபிப்போம், என்று கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மாநில தலைவர் முருகன், துணை தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் வேலூர் கார்த்தியாயினி, கர்நாடக எம்.பி. மோகன், மாநில பொதுச் செயலாளர் ராகவன், மாநில துணை தலைவரும், யாத்திரை பொறுப்பாளருமான கே.எஸ்.நரேந்திரன், மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் உள்பட 3 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை நடந்தது. இதில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பீகார் மாநில சட்டபேரவை தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இதில் பா.ஜனதா மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பீகாரில் பா.ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி நக்சலைட்டுகளுடன் கூட்டணி வைத்தது. ஆனால் அதையும் மீறி மக்கள் நமக்கு வாக்களித்துள்ளார்கள். தெலுங்கானாவில் நடந்த இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
மணிப்பூர் முதல் கர்நாடகா வரையில் பா.ஜனதா மகத்தான வெற்றியை பெற்று வருகிறது. வருகிற 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா மகத்தான வெற்றியை பெறும். நாம் வேல் யாத்திரை நடத்துகிறோம். இதை வன்முறை ஆயுதம் என்று கூறுகிறார்கள். கடவுளின் கையில் இருக்கும் வேல் தீய சக்திகளை அழிக்கக் கூடிய ஆயுதம் தான். நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா மற்றும் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பார்வையாளர் கோட்டீஸ்வரன் உள்பட 106 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். முன்னதாக எச்.ராஜாவை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போது பா.ஜனதா தொண்டர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story