ஒரே பிரசவத்தில், எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகளை காப்பாற்றிய நாமக்கல் அரசு டாக்டர்கள்


ஒரே பிரசவத்தில், எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகளை காப்பாற்றிய நாமக்கல் அரசு டாக்டர்கள்
x
தினத்தந்தி 11 Nov 2020 2:24 PM GMT (Updated: 11 Nov 2020 2:24 PM GMT)

ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகளுக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.

நாமக்கல், 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு ஜெயஸ்ரீ கர்ப்பம் தரித்தார். அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு கடந்த ஜூலை மாதம் ஒரே பிரசவத்தில் மிக குறைந்த எடையுடன் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீயின் பெற்றோர், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இன்குபேட்டரில் வைத்து இந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு, எடைகள் கூடி மிக ஆரோக்கியத்துடன் உள்ளன.

இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் கூறியதாவது:-

இந்த 3 குழந்தைகளும் பிறக்கும் போது 1 கிலோ 200 கிராம், 1 கிலோ 600 கிராம், 1 கிலோ 900 கிராம் என்ற எடை கணக்கில் தான் பிறந்து உள்ளன. நாமக்கல் அரசு மருத்துவமனையிலேயே எங்களது கண்காணிப்பில் வைத்து தாய்ப்பால் மூலமாகவும், சில சிகிச்சைகள் மூலமாகவும் மிகவும் கவனமாக கையாண்டு வந்தோம். தற்போது 3 குழந்தைகளுமே நல்ல ஆரோக்கியத்துடன் 5 கிலோ அளவிற்கு எடை உயர்ந்து உள்ளன. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை அளிப்பது இதுதான் முதல்முறை ஆகும்.

இந்த 3 குழந்தைகளுக்கும் பிரத்தியங்கிரா, பிரகதி, பிரனிதா என குடும்பத்தார் பெயர் சூட்டி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 8 மாதங்களில் சுமார் 1,700 பிரசவங்கள் நடைபெற்று இருப்பதாகவும், 751 பச்சிளங் குழந்தைகளுக்கு ஐ.சி.யு. சிகிச்சை, 50 குழந்தைகளுக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், 14 பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாகவும் மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி கூறினார்.

Next Story