பல்லாரி அருகே உள்ள மந்திரி ஆனந்த்சிங் வீட்டுக்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு வனத்துறையினர் பிடித்து சென்றனர்


பல்லாரி அருகே உள்ள மந்திரி ஆனந்த்சிங் வீட்டுக்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு வனத்துறையினர் பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 12 Nov 2020 12:52 AM IST (Updated: 12 Nov 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி அருகே உள்ள மந்திரி ஆனந்த்சிங் வீட்டுக்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த முதலையை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

பல்லாரி, 

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசில் வனத்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆனந்த்சிங். இவர், பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே அருகே தேசிய நெடுஞ்சாலையில் மந்திரி ஆனந்த்சிங்க்கு சொந்தமான வீடு உள்ளது. அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலையில் மந்திரி ஆனந்த்சிங் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது செடிகளுக்கு மத்தியில் ஒரு முதலை கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மந்திரி ஆனந்த்சிங் குடும்பத்தினரும் பீதி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதலையை பிடித்து சென்றனர்

வனத்துறை ஊழியர்கள், மந்திரி ஆனந்த்சிங் வீட்டுக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு சுற்றித்திரிந்த முதலையை வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக பிடித்தனர். அந்த முதலை ஒசப்பேட்டேயில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மந்திரி ஆனந்த்சிங் வீட்டின் அருகே பெரிய கால்வாய் செல்கிறது.

அந்த கால்வாயில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் முதலை வெளியேறி இருக்கலாம் என்றும், பின்னர் மந்திரி ஆனந்த்சிங் வீட்டுக்குள் அது புகுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். மந்திரி வீட்டுக்குள் முதலை புகுந்த சம்பவம் ஒசப்பேட்டேயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story