நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தியதில் 2-ம் இடம் பெற்ற மராட்டியத்துக்கு தேசிய விருது வெங்கையா நாயுடு பாராட்டு


நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தியதில் 2-ம் இடம் பெற்ற மராட்டியத்துக்கு தேசிய விருது வெங்கையா நாயுடு பாராட்டு
x
தினத்தந்தி 12 Nov 2020 2:51 AM IST (Updated: 12 Nov 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மராட்டியத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் நேற்று தேசிய விருது வழங்கப்பட்டது.

மும்பை, 

இந்தியாவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை மத்திய ஜல்சக்தி துறை தேர்வு செய்து, விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2-வது ஆண்டாக விருது வழங்கும் விழா நேற்று காணொலியில் நடைபெற்றது.

கடந்த 2019-ம் ஆண்டு நீர் மேலாண்மையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டது. 2-வது இடம் மராட்டிய மாநிலத்துக்கும், 3-வது இடம் ராஜஸ்தான் மாநிலத்துக்கும் கிடைத்தது. சிறப்புநிலை பிரிவில் நாட்டில் முதல் மாநிலமாக மிசோரம் தேர்வு செய்யப்பட்டது.

98 விருதுகள்

இவை உள்பட மொத்தம் 16 பிரிவுகளில் 98 நீர் மேலாண்மை விருதுகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் காணொலி மூலம் நேற்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசும்போது கூறியதாவது:-

அளவற்ற வளம் அல்ல

இந்தியா ஒரு பரந்த நாடு. எந்த ஒரு செயலும் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை. நீர் பாதுகாப்பை பொதுமக்களின் இயக்கமாக மாற்ற வேண்டும். தண்ணீர் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட வளம். அது அளவற்ற வளமல்ல என்பதை மக்களிடம் திரும்ப திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டும். நீர் பாதுகாப்பு, நீர் வீணாதலை குறைத்தல் ஆகியவை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படாவிட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.

மழைநீர் சேகரிப்பு கட்டாயம்

தண்ணீர் பாதுகாப்பை நமது வாழ்க்கை முறையில் ஒன்றாக ஆக்கும் வகையில் நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும்.

தண்ணீர் பயன்பாடு குறையும்போது மின்சாரமும் குறைவாகவே பயன்படுத்தப்படும். இதன் விளைவாக சுற்றுச்சூழல் சீர்கேடு குறையும். எனவேதான், தண்ணீர் பாதுகாப்பை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவதை ‘ஜல்சக்தி அபியான்’ நோக்கமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு புதிய கட்டிடத்திலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

பாராட்டு

தேசிய விருதை பெற்ற தமிழகம், மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய முதல் 3 மாநிலங்களை நான் பாராட்டுகிறேன். இது நல்ல பணிகளுக்கான பாராட்டு மட்டும் அல்ல. பல்வேறு பங்கெடுப்பாளர்களை ஊக்குவித்து நாட்டின் தண்ணீர் வளத்தை திறனுடன் நிர்வகிப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story