காங்கிரஸ் பிரமுகரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின சென்னை விமான நிலையத்தில் போலீசார் 5 மணிநேரம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் செல்ல இருந்த காங்கிரஸ் பிரமுகரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரிடம் 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கோவைக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. அதற்கு முன்னதாக இந்த விமானத்தில் பயணம் செல்ல தயாராக இருந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை மத்திய தொழிற்படை போலீசார் தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த விமான நிலையத்தில் கோவை செல்ல தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான மயூரா ஜெயகுமார் வந்தார். இந்தநிலையில் அவரது கைப்பையை ஸ்கேன் எந்திரத்தில் சோதித்தபோது வெடிப்பொருள் இருப்பதற்கான அலராம் ஒலித்தது. உடனே உஷாரான தொழிற்படை போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பையை பிரித்து பார்த்தபோது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவரை அழைத்து போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த போது, அவர் தன்னிடம் துப்பாக்கி வைத்து கொள்வதற்கான உரிமம் இருப்பதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
தனது கைப்பையில் அதற்குண்டான தோட்டாக்களை வைத்திருந்தநிலையில், அதை கவனிக்காமல் தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் அவரை விசாரணைக்காக ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் துப்பாக்கிக்கான உரிமம் வைத்திருந்தது தெரியவந்தது. அதற்கான அசல் ஆவணங்களை காட்டிவிட்டு செல்லுமாறு போலீசார் அவருக்கு அறிவுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து, அவர் துப்பாக்கி உரிமத்திற்கான சான்றை காட்டியதையடுத்து, 5 மணி நேர விசாரணைக்கு பின்பு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மற்றொரு விமானத்தில் கோவை புறப்பட்டு சென்றார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story