கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த வண்டலூர், கிண்டி பூங்காக்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு


கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த வண்டலூர், கிண்டி பூங்காக்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 11 Nov 2020 10:09 PM GMT (Updated: 11 Nov 2020 10:09 PM GMT)

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா 7 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் சொற்ப அளவிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

வண்டலூர், 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது. பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் வந்து தங்களுடைய பொழுதை கழிப்பதில் இந்த பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் இருந்ததால் அவை திறக்கப்படாமலே இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அந்த தளர்வில் செங்கல்பட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவும், சென்னை கிண்டி சிறுவர் பூங்காவும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த 2 பூங்காக்களும் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டு இருக்கின்றன.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்று முழுமையாக மறையாததால், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பூங்காக்களுக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதனை பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி, முக கவசம் கண்டிப்பாக அணிந்து வருவதோடு, பூங்காக்களின் நுழைவுவாயில் பகுதிகளில் கைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு கழுவுவதற்கும், அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. மேலும் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளுக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், மீன், பாம்பு உள்பட சிலவற்றை பார்ப்பதற்கான இடங்கள் குறுகலாக இருக்கும் காரணத்தால், அங்கு மக்கள் அதிகம் கூடிவிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

இதுதவிர மற்ற விலங்குகள், பறவைகளை வழக்கம்போல சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் விலங்குகள் இருக்கும் பகுதிகளை சுற்றி அடைக்கப்பட்டு இருக்கும் கைப்பிடி பகுதிகளை யாரும் தொட்டுவிடாமல் இருப்பதற்கு சுமார் 2 மீட்டர் தூரம் தள்ளி வட்டகுறி இடப்பட்டு இருந்தது. அதில் நின்று பார்வையாளர்கள் விலங்குகளை பார்வையிட அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பார்வையாளர்கள் விலங்குகளை பார்த்து, செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 குட்டிகளை ஈன்ற வெள்ளைப்புலி பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கட்டண உயர்வு ஏன்?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே இருந்த கட்டணத்தைவிட சற்று கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதாவது, பெரியவர்களுக்கான கட்டணத்தில் ரூ.15-ஐ உயர்த்தி ரூ.90 என்ற நிலையிலும், சிறியவர்களுக்கான கட்டணத்திலும் ரூ.15 அதிகரித்து, ரூ.50 என்ற நிலையிலும் நிர்ணயித்து இருந்தனர். இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பூங்கா அதிகாரிகளிடம் கேட்டபோது, பூங்கா வளாகத்துக்கு உள்ளேயே குடிநீர், கழிவறை வசதிகளை இலவசமாக வழங்குவதற்காகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றனர்.

7 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா காரணமாக குறைவான பார்வையாளர்களே வந்திருந்தனர். இனி வரக்கூடிய நாட்களில் பார்வையாளர்கள் அதிகளவில் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நேரடியாக கவுண்ட்டர்களில் டிக்கெட் எடுப்பதை தவிர, ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்து பார்வையாளர்கள் வரலாம் என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியிருக்கிறது.

கிண்டி சிறுவர் பூங்கா

அதேபோல், கிண்டி சிறுவர் பூங்காவிலும் மிகவும் சொற்ப அளவிலேயே பார்வையாளர்கள் நேற்று வந்தனர். அங்கும் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, உபகரணங்கள் துணியை கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.

பூங்காவை பார்வையிட 10 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களும், கர்ப்பிணிகளும் வருவதை தவிர்க்கவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் சிலர் பூங்காவை பார்வையிட வந்திருந்ததை பார்க்கமுடிந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் அடைப்பட்டு கிடந்த பொதுமக்களுக்கு பூங்கா திறப்பு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. பூங்காவை பார்வையிட வந்திருந்தவர்களும் இதே கருத்தை தெரிவித்ததோடு, புதிய உற்சாகத்தை உணர்ந்ததாகவும் கூறினர். அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்று பூங்கா நிர்வாகங்கள் கூறுகின்றன.

Next Story