மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொல்லியல் துறை கடிதம்
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை திறக்க அனுமதிக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தொல்லியல் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்புவதால் இவற்றை திறக்க மத்திய அரசு, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற பாரம்பரிய நினைவு சின்னமான தாஜ்மகால் ஏற்கனவே திறக்கப்பட்டு பார்வையாளர்கள் கண்டு களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக இங்கு தமிழக அரசின் உத்தரவால் பார்வையாளர் களுக்கான தடை நீட்டிக்கப்பட்டது.
ஏமாற்றத்துடன் செல்கின்றனர்
இந்தநிலையில் மாநில அரசின் சுற்றுலா தடை நீட்டிப்பால் இவை தற்போதும் மூடப்பட்டே உள்ளன. சுற்றுலாவை நம்பியே இந்த ஊர் தொழில்கள் உள்ள நிலையில் சுற்றுலா முடக்கத்தால் இந்த பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் சுற்றுலா தடை, புராதன சின்னங்கள் மூடல் என அமலில் இருப்பினும் சென்னை புறநகர் மற்றும் வெளிமாவட்ட பயணிகள் வார இறுதி நாட்களில் இங்கு குவிகின்றனர். சாலையோரம் நின்று வெளியில் இருந்தே கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை கண்டு பொழுதை போக்குகின்றனர். மூடப்பட்டுள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்களுக்குள் சென்று புகைப்படம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இந்தநிலையில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சுற்றுலா பயணிகள் இங்குள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை சார்பில் புராதன சின்னங்களை திறக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story