கைதான கூட்டாளிக்கு கொடுப்பதற்காக பந்தில் கஞ்சாவை அடைத்து ஜெயிலுக்குள் வீச முயற்சி 3 பேர் கைது
கைதான கூட்டாளிக்கு கொடுப்பதற்காக பந்தில் கஞ்சாவை அடைந்து ஜெயிலுக்குள் வீச முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனே,
கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கலாபா சிறைச்சாலை அருகே நேற்று வழக்கம்போல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சிறைச்சாலை சுற்றுச்சுவர் அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் 3 பேர் கையில் டென்னிஸ் பந்துகளுடன் சுற்றித்திரிவதை போலீசார் பார்த்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் கையில் இருந்த 3 டென்னிஸ் பந்துகளை வாங்கி சோதனையிட்டனர்.
கஞ்சா பறிமுதல்
அப்போது அதற்குள் கஞ்சா அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டென்னிஸ் பந்துகளையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதாகி ஜெயிலில் அடைப்பட்டு கிடக்கும் தனது கூட்டாளிக்கு கஞ்சாவை வழங்க அதை டென்னிஸ் பந்துகளில் அடைந்து சிறைக்குள் வீச முயன்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் சோதனை நடத்த உத்தரவிட்டனர். இதன்பேரில் நடத்திய சோதனையில் சிறைச்சாலைக்குள் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த செல்போன் யாருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story