போதைப்பொருள் விவகாரம் நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலியிடம் 2-வது நாளாக விசாரணை


போதைப்பொருள் விவகாரம் நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலியிடம் 2-வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2020 3:39 AM IST (Updated: 13 Nov 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலியிடம் 2-வது நாளாக நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மும்பை,

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து இந்தி திரையுலகினருக்கு போதை பொருள் கும்பலிடம் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்தி திரையுலகிற்கும் போதை பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் சோவிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

கஞ்சா பறிமுதல்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யது அதிடியாக கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து செல்போன், மடிக்கணினி போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

6 மணி நேரம் விசாரணை

இதனையடுத்து, முன்தினம் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிசிடம் நேற்று முன்தினம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக அவர் தென்மும்பை பல்லர்டு எஸ்டேடில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் முன்னணி நடிகைகள் ஷரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story