திருமுடிவாக்கம் சிப்காட்டில் சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து


திருமுடிவாக்கம் சிப்காட்டில் சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
x
தினத்தந்தி 12 Nov 2020 11:20 PM GMT (Updated: 12 Nov 2020 11:20 PM GMT)

திருமுடிவாக்கம் சிப்காட்டில் உள்ள சோபா தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சையது ஜாபர். இவர், குன்றத்தூரை அடுத்த திருமுடிவக்கம் சிப்காட் பகுதியில் சோபா உள்ளிட்ட பர்னிச்சர்கள் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

கீழ்தளத்தில் வாகனங்களுக்கு பொறுத்தப்படும் பேரிங் தயாரிக்கும் கம்பெனியும், மேல் தளத்தில் சோபா தயாரிக்கும் கம்பெனியும் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் ஊழியர்கள் சாப்பிட சென்றுவிட்டனர். ஒரு சிலர் மட்டும் பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தீ விபத்து

அப்போது திடீரென சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து விட்டனர். இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எளிதில் தீப்பற்றக்கூடிய பஞ்சு, மரப்பொருட்கள் என்பதால் கம்பெனி முழுவதும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2 மணிநேரம் போராட்டம்

தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்துபோனதால் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் சோபா தயாரிக்கும் கம்பெனியில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் அருகில் அடுத்தடுத்து உள்ள மற்ற கம்பெனிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாசவேலை காரணமா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story