நாளை தீபாவளி பண்டிகை: நெல்லை கடைகளில் விற்பனை களை கட்டியது
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நெல்லை கடைகளில் விற்பனை களை கட்டியது.
நெல்லை,
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், பாத்திர கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், பர்னிச்சர் கடைகள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு கடைகளிலும் தள்ளுபடி அறிவித்ததால், விற்பனை களை கட்டியது.
போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு ஊர்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக பொருட்கள் வாங்குவதற்காக நெல்லைக்கு வாகனங்களில் வருகின்றனர். நெல்லை டவுன் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர். போக்குவரத்து நெரிசலால் நெல்லை சந்திப்பு சுலோச்சன முதலியார் பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லை டவுன் பகுதியில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிக்கின்றனர். திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாதாரண உடைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story