கார்டை சொருகிய பிறகு ஏ.டி.எம். எந்திரத்தில் வெகுநேரம் கழித்து வந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு - உரிமை கொண்டாடிய தொழிலாளியிடம், விசாரணைக்கு பிறகு ஒப்படைப்பு
கார்டை சொருகிய பிறகு ஏ.டி.எம். எந்திரத்தில் வெகுநேரம் கழித்து வந்த ரூ.9 ஆயிரம் பணம், போலீஸ் விசாரணையை தொடர்ந்து தொழிலாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குளச்சல்,
குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக குளச்சலில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அங்கு ரூ.9 ஆயிரம் எடுப்பதற்காக கருவியை இயக்கினார். ஆனால், பணம் வெளியே வரவில்லை. இதையடுத்து சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு, அருகில் இருந்த மற்றொரு கருவியில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார்.
அந்த நேரம் மண்டைக்காடு பேரூராட்சியில் துப்புரவு வேலை செய்யும் மகேஷ் (32) மற்றும் சரல்விளையை சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் (27) ஆகியோர் பணம் எடுப்பதற்கு அதே ஏ.டி.எம். மிற்கு வந்தனர். அப்போது அய்யப்பன் முதலில் இயக்கிய கருவியில் ரூ.9 ஆயிரம் இருந்ததை கண்டனர். அந்த பணத்தை அவர்கள் எடுத்தனர்.
இதனை கவனித்த அய்யப்பன், நடந்தவற்றை கூறி அந்த பணம் தன்னுடையது என கூறினார். ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மற்றும் மகேஷ் அந்த பணத்தை எடுத்து குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அய்யப்பன், போலீஸ் நிலையம் சென்று அது தன்னுடைய பணம் தான் என்று முறையிட்டார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, பணம் கண்டெடுக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அந்த பணம், அய்யப்பனின் பணம் தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் சதீஷ்குமார், மகேஷ் அய்யப்பனிடம் ரூ.9 ஆயிரத்தை ஒப்படைத்தனர்.
கார்டை சொருகிய பிறகு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வர தாமதமானதால் ஏற்பட்ட குழப்பத்தால், தொழிலாளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
Related Tags :
Next Story