தூத்துக்குடி அருகே 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே 1¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எட்டயபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பறிமுதல்
அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த லோடு ஆட்டோவில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 1¼ டன் எடை கொண்ட ரேஷன் அரிசி, லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசியை கடத்திச் சென்று கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் பகுதிகளில் கோழித்தீவனமாக மாற்றி விற்பனை செய்து வந்த கூசாலிபட்டியை சேர்ந்த புதிய பாண்டியன் (வயது 26) மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரியப்பன் (30) ஆகிய இருவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பதுக்கல்
மேலும் மாவட்டத்தில் தற்போது சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் லாப நோக்கு கருதி வெங்காயத்தை அதிகமாக பதுக்கி வைத்திருந்து பின்னர் கூடுதல் விலைக்கு விற்க முயற்சிப்பதாகவும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் யாரேனும் சிறிய வெங்காயம், பல்லாரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக பதுக்கி வைத்திருந்தால் பொதுமக்கள் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் 94981 91500, 94458 80573 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story