போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை


போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2020 7:26 PM GMT (Updated: 13 Nov 2020 7:26 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்தார்.

மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து இந்தி திரையுலகிற்கு போதைப்பொருள் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை பாந்திராவில் உள்ள 47 வயது நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து இருந்தனர்.

இந்தநிலையில் 2 நாட்களாக போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிசிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் அர்ஜூன் ராம்பாலின் வெளிநாட்டு நண்பர் பவுல் பர்டெல் என்பவரை கைது செய்தனர்.

7 மணி நேரம் விசாரணை

இந்த பரபரப்புக்கு மத்தியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதனை ஏற்று அவர் நேற்று காலை 11 மணிக்கு மும்பை பல்லர்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் அதிகாரிகள் துருவி, துருவி விசாரித்தனர். 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது தான் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் முன்னணி நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story