புதுவையில் 3½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. அடுத்தடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து தினந்தோறும் புதுப்புது உச்சத்தை தொட்டது. பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதையடுத்து அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக அளவில் பொதுமக்களிடம் பரிசோதனை நடத்தியது.
இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகமாகி மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத அளவுக்கு போனது. இதனால் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு மளமளவென சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது.
உயிரிழப்பு 608 ஆனது
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 70 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேயொருவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 251 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 419 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 36 ஆயிரத்து 252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 1,073 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 335 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 738 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 608 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுவையில் உயிரிழப்பு என்பது 1.68 சதவீதமாகவும், குணமடைவது 95.36 சதவீதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story