திருச்சியில் ஒரு மணி நேரம் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது


திருச்சியில் ஒரு மணி நேரம் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 14 Nov 2020 5:56 AM IST (Updated: 14 Nov 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சி, 

திருச்சியில் கடந்த 2 நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் அடித்தாலும் மழையும் சில நேரங்களில் தூறியது. நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. ஆனால் அந்த மழை நீடிக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றாலும் வெயில் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.இதனால் திருச்சி நகரில் ஜங்ஷன், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், மெயின்கார்டு கேட் ஆகிய இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் பின்புறம் தேங்கிய மழைநீர் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்தது.

வியாபாரிகள் பாதிப்பு

இந்த மழையால் திருச்சி பெரிய கடை வீதி, என்.எஸ்.பி.சாலை, சத்திரம் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களிலும் சாலையோரங்களில் தீபாவளி பண்டிகைக்காக துணி வியாபாரம் செய்த வியாபாரிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்த தரைக்கடை வியாபாரிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். சில இடங்களில் அவர்கள் சுதாரித்துக்கொண்டு பொருட்களை எடுப்பதற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொருட்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. இந்த மழையால் தரைக்கடை வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு டவுன்பஸ் தண்ணீரில் சிக்கிக்கொண்டது. தண்ணீரில் சிக்கி பஸ் நின்றுவிட்டதால் பயணிகள் தத்தளித்தனர். பஸ் ஸ்டார்ட் ஆகாததால் டிரைவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அந்த பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்துக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

சமயபுரம்

சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் நேற்று காலையிலேயே மழை விட்டு, விட்டு பெய்தது. அதைத் தொடர்ந்து சிறிது நேரம் வெயில் அடித்தது. பின்னர் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து மழை தூறிக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மளிகை கடை மற்றும் துணிக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் அடைந்தனர். மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் பள்ளமான பகுதியில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Next Story