கடந்த ஒரு ஆண்டில் 99 குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்: சைல்டுலைன் அமைப்பினர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 99 குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று சைல்டு லைன் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்,
தேசிய அளவில் குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் சைல்டுலைன் அமைப்பின் சார்பில் ஒரு வார காலம் சைல்டுலைன் உங்கள் நண்பன் என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி வரை இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கலந்துரையாடல், மரக்கன்று நடும்விழா, மனிதசங்கிலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை(ஒரு ஆண்டில்) சைல்டுலைன் அமைப்பின் 1098 இலவச தொலைபேசி எண்ணிற்கு 2 ஆயிரத்து 440 அழைப்புகள் வரப்பெற்று அதில் ஆயிரத்து 811 அழைப்புகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டத்தில் 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பெற்றோரிடம் உறுதிமொழி எழுதி வாங்கப்பட்டுள்ளது.
பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகள் 106 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 36 குழந்தைகள் மீட்கப்பட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளர்கள் 26 பேர் மீட்கப்பட்டும், கொத்தடிமை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டு பள்ளி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர வீட்டைவிட்டு ஓடிச்சென்ற 19 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன குழந்தைகள் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாலைகளில் பிச்சை எடுத்து வந்த 45 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வகுப்பறைகளில் ஆசிரியர்களின் கண்டிப்பினால் பாதிக்கப்பட்ட 48 குழந்தைகள் மீட்கப்பட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்;டுள்ளது. வீடுகளில் பெற்றோர் மற்றும் உறவினர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தகவல் தெரிவித்த 103 குழந்தைகள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மது போதையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்ட 13 குழந்தைகள் மீட்கப்பட்டு கவுன்சிலிங் மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மறுவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2 குழந்தைகள் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையவும், குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கவும் சைல்டுலைன் அமைப்பின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை சைல்டுலைன் இயக்குனர் கருப்பசாமி, துணை இயக்குனர் தேவராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாரா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story